இயலா புரட்சிரகு ஓடி வந்து அந்த மின்சார ரயிலில் தாவி ஏறினான். அதிக கூட்டம். ஒரு ஓரமாய் நின்றுக்கொண்டான். கண் தெரியாத ஒருவர் சின்னதாய் பேக்கிங் செய்த கள்ளமிட்டாய் ஒன்று ஐந்து ரூபாய் என கூவிக்கொண்டே வந்தார். அவன் தன் மேல்பாக்கெட்டை தடவி பார்த்தான். இரண்டு பழைய பத்து ரூபாய் இருந்தது. கண்களை திருப்பிக்கொண்டான். வண்டி சானடோரியம் ரயில்வே நிலையத்தில் நின்றது.

கூட்டத்தை இடித்துக்கொண்டு மூன்றாம் பாலினத்தவர் நால்வர் ஏறினர். அந்த ரயில்பெட்டியில் அமைதியாக இருந்த அத்தனை பேரும் தனது ஃபோனை நோண்டுவது போலவும், மடித்து வைத்த நியூஸ் பேப்பரை மேய்வது போலவும் திடீரென பிஸியானர். அவர்களின் கைதட்டலும் பேச்சுக்குரலும் ரகுவின் அருகில் வந்தது. அவன் ‘இல்லை கா..’ என்றான்.

‘அட இல்லனு சொல்லக்கூடாது. எதனா கொடுத்துட்டு போ பா..’ அவர் சொன்னார். பாக்கெட்டில் கைவிட்டு பழைய அந்த இரண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்து பாவமாக பார்த்தான். அவர் மெல்லியதாய் சிரித்தார். இரண்டு கைகளையும் அவன் தலையில் வைத்து ஆசிர்வதித்துவிட்டு பணம் வாங்காமல் இறங்கிவிட்டார். அவன் முகத்தில் சொல்லமுடியா வலி.

பல்லாவரம் ரயில் நிலையம். முன்று ஆண்கள் ஒரு பெண் சிவப்பு நிற லோகோ போட்ட ஒரு சட்டையை போட்டுக்கொண்டு ஏறினர்..

‘என்ன நடக்கிறது இந்த நாட்டில்? ஊழல் பெருகிபோனது. மத்திய அரசின் கைப்பாவையாக நடந்துக்கொள்கிறது நம் மாநில அரசு. கேள்வி கேட்க வேண்டாமா? எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டாமா..’ ஆக்ரோஷமாக ஒரு இளைஞன் பேசினான். மற்ற இருவர் துண்டு சீட்டுகளை இருந்தவர்களுக்கு கொடுத்தனர். ரகுவிற்கும் ஒன்று கொடுக்கப்பட்டது. சே, ஃபிடல், பிராபகரன் படங்களை போட்டு சமீபமாக தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டியல் இட்டிருந்தார்கள். அந்த பெண் உண்டியலை குலுக்கிக்கொண்டே வந்தார். ரகு தன் பாக்கெட்டை தடவினான். அந்த பழைய இரண்டு பத்து ரூபாயை எடுத்து அந்த உண்டியலில் போட்டான். ‘நன்றி தோழர்..’ அந்த பெண் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

ரகுவின் அலைப்பேசி ஒலித்தது. அவன் எடுத்தான்.

‘எங்கயா இருக்க..’ மறுமுனை கடுகடுப்பாக கேட்டது.

‘வந்துட்டே இருக்கேன் சார். பத்து நிமிசம்..’


‘வேலைக்கு கேக்குறப்போ மட்டும் தொங்குங்க. வேலைய கொடுத்தா இப்படி பண்ணுங்க.. சீக்கிரம் வந்து தொல..’ அந்த கடுகடுப்பு இன்னும் பொறிந்து முடிந்தது. ரகு முகத்தில் கவலை. அந்த அழைப்பு முடிந்தும் அவன் அலைப்பேசியே பார்த்துக்கொண்டிருந்தான். மங்கிப்போன ஒளியில் இருந்தது சே குவேராவின் புகைப்படம் வால் பேப்பராக.

- தம்பி கூர்மதியன்

நன்றி: பிரதிலிபி

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி