வண்டி தம்பி


அவன் பெயர் ரகு. இருபதுகளை கடந்திருந்த ஒரு சாதாரண இளைஞன். அந்த வயதிற்கேற்ற ஆசைகளும் நிரம்ப பெற்றவன். அப்படி ஒரு ஆசை தான் அவனது பைக். நீண்ட நாட்களாக அவனுக்கு ஒரு பைக் வாங்கவேண்டும் என்பது கனவு. அது தான் இன்று அவனுக்கு நிறைவேறியது. ஆனால் எதிர்பாரா விதமாய் மகிழ்வுக்கு  பதில் அவன் முகத்தில் சோகம் குடிக்கொண்டிருக்கிறது.

‘யப்பா.. என்னைய ஏன்பா  இப்படி படுத்துற..’ ரகு அவன் அப்பாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

‘ஏன்டா.. என்ன ஆச்சு..?’ அவன் அப்பா கேட்டார்.

‘பைக் வாங்கி தர்றேன்னு சொன்னீயே பா’

‘ஆமா டா.. இதுக்கு என்ன? செமயா  இருக்குல..’ அவர் அந்த வண்டியை தட்டிக்கொண்டே கேட்டார். அது ஒரு ஸ்கூட்டர்.

‘அப்பா.. இது லேடீஸ் ஸ்கூட்டரு பா.. மனசாட்சி இல்லயா உனக்கு? இத எப்படி நான் எடுத்துட்டு வெளிய போறது..’

‘வேற என்ன வாங்குறது உனக்கு..’

‘அப்பா.. புல்லட் பைக் பா. இந்த என்னை அறிந்தால்ல அஜித் ஓட்டுவாரே. அப்படி கெத்தா..’

‘டே.. அதெல்லாம் ரிஸ்க். உன்ன போக சொல்லிட்டு  நாங்க வயித்துல நெருப்ப கட்டிகிட்டு நிக்கவா.  ஓவரா கேட்டனா விஐபி படத்துல தனுஷ் ஓட்டுற பைக் தான் வாங்கி தருவேன். மரியாதையா இத ஓட்டுறியா இல்லயா..’ அவன் அப்பா கேட்டதும் அவன் முனு முனுத்துக்கொண்டான்.

’என்னடா மொனகுற..’ அவர் கேட்டதும் பல்லை இளித்தான்.

‘இதே ஓட்டுறன் பா..’ அவன் சொல்லிவிட்டு அந்த வண்டியை எடுத்து ஓடினான். முகம் அஷ்ட கோணலாக தான் இருந்தது.

அவன் சாலையோரம் இருந்த ஒரு கட்டையில் உட்கார்ந்திருந்தான். முன்னால் அவனிடம் புதிதாய் சேர்ந்த அவன் வண்டி நின்றுக்கொண்டிருந்தது. அவன் நண்பர்களை நினைத்தான்.

‘என்ன மச்சான் … புதுசா பைக்.. பைக்.. பைக்கா..’ என அவர்கள் கேட்டுவிட்டு கெக்கபெக்கவென சிரிக்கும் கேலி முகங்கள் ஞாபகம் வந்தது அவனுக்கு. கன்னத்தில் கை வைத்துக்கொண்டான். அந்த வண்டியையே முறைத்துக்கொண்டிருந்தான்.

‘ஏன்டா உர்ருனு இருக்க..’ ஒரு குரல் கேட்டது. அக்கம் பக்கம் திரும்பி பார்த்தான். யாரும் இல்லை. அமைதியாக உட்கார்ந்தான். மீண்டும் கன்னத்தில் கைவைத்தான்.

‘அடே.. என்ன ஆச்சு?’ மீண்டும் ஒரு குரல். அவன் அதிர்ந்தான். சட்டென எழுந்தான்.

‘டே..’ மீண்டும் குரல். இம்முறை அது வண்டியிலிருந்து வந்தது என்பது அவனுக்கு தெரிந்தது. வண்டிக்கு அருகில் போனான்.

‘குரங்கு. நான் தான்டா பேசுறேன்..’ மீண்டும் குரல். வண்டியிலிருந்து தான். பட்டென பின்வாங்கினான். கட்டைக்கு பின்னால் சென்று ஒளிந்துக்கொண்டான்.

‘ஆமா. ஒளிஞ்சு விளையாடுறாரு. வெளிய வாடா..’ வண்டி பேசியது.

‘யார் நீ? வண்டி எப்படி.. நீ எப்படி.. நீ யாரு? வண்டில இருந்து எப்படி சத்தம் வருது..’ ரகு கொஞ்சம் தயங்கிக்கொண்டே தான் கேட்டான்.

‘அசிங்கமா மறைஞ்சு நின்னுக்கிட்டு கேக்குறீயே. வெளிய வாடா சொல்லுறேன்’

‘அதெல்லாம்  மாட்டேன். எனக்கு பயமா  இருக்கு. திடீர்னு வண்டி பேசுனா பயப்பட மாட்டாங்களா? மரியாதையா சொல்லு. நீ யாரு.. எப்படி வண்டியில இருந்து  பேசுற..’

‘சரி சரி.. குதிக்காத. என் பேர் ராகுல். எங்கயாச்சும் கேட்ட மாதிரி இருக்கா?’ வண்டி கேட்டது. ரகு சிறிது நேரம் யோசித்தான்.

‘என் ஸ்கூல் மேட் ஒருத்தன் பேரு. வேற யாரு..’ ரகு  யோசித்தான்.

‘அட பன்னி. உன்கிட்ட வந்து சேந்தேன் பாரு நான். அப்படியே வந்து உன்மேல ஏறுனா சரியா போகும்..’

‘கோப படாத. தெரியிலனு தானே கேக்குறேன்..’

‘உன் தம்பி டா’ வண்டி சொன்னது. ரகு முகம் யோசனையில் சுருங்கியது. பதினைந்து வருடம் முன்பு அவனது ஒருவயது தம்பி உடல் நலம் சரியில்லாமல் இறந்துபோனான். அவன் பெயர் ராகுல் தான். ரகுவிற்கு நினைவு வர அவன் மெல்ல தலையை ஆட்டிக்கொண்டே..

‘டே.. ராகுலா..’ என்று கேட்டுக்கொண்டே முன்னேறி வந்தான்.  வந்தவன் பாதியிலே நின்றான்.

‘ஆனா 15 வருசம் கழிச்சு எப்படி இப்போ? அதுவும் வண்டியில?’

‘யப்பா ராசா.. ரெண்டு வருசம் முன்னாடி நம்ம வீட்டுல இருந்த ஒரு சைக்கிள தூக்கி போட்டல. அதுல தான் செயல்படமுடியாம கிடந்தேன். அத தூக்கிட்டு  போயி ஒரு இரும்பு கடைகாரன் போட்டான். அது நேரா இன்னொரு பெரிய இடத்துக்கு போச்சு. அங்க இருந்து ஒரு ஃபேக்டரிக்கு போச்சு. அங்க, முழுக்க பிரிச்சு உருக்கி இந்த வண்டி செய்யிற இடத்துக்கு போச்சு. அப்பரம் வண்டியா மாறினேன். சரி… நல்ல ஸ்கூட்டரா இருக்கோமே எதனா பொண்ணுகிட்ட மாட்டுவோம்னு நினச்சா. என் கிரகம்… உன்கிட்டயே வந்து மாட்டிகிட்டேன்’ வண்டி சலிப்போடு சொன்னது.

‘டே.. அண்ணன்கிட்ட பேசுற.. ஞாபகம் இருக்கட்டும்’ சொல்லிக்கொண்டே ரகு பக்கத்தில் வந்தான்.

‘அண்ணனாம். வெண்ணெய். ஏன்டா.. அறிவில்ல. சின்னவயசுல அப்படியாடா மூஞ்சுல அமுத்தி அமுத்தி முத்தம் கொடுப்ப. இதுல கன்னத்த எந்நேரமும் கிள்ளிகிட்டே வேற கிடப்பான். நான் மட்டும் அப்பவே வளர்ந்திருந்தேன். வாய உடச்சிருப்பேன்’

‘உடுறா உடுறா… ஆமா. நீ போறப்போ உனக்கு 1 வயசு தானே. இப்ப எப்படி பேசுற?’

‘சாகுறப்போ எந்த வயசோ அதே வயசு தான் இருக்குமா? அதெல்லாம் நாங்களும் வளருவோம்டா. நீ வளர வளர நானும் வளருவேன்..’ வண்டி சொன்னது. ரகு ‘ஓ’வென கேட்டுக்கொண்டு விட்டத்தை பார்த்தான்.

வண்டியின் முன் சக்கரம் அவன் காலை தட்டியது.

‘என்னடா..’ முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ரகு கேட்டான்.

‘என்னாத்த யோசிக்கிற..’

‘இல்ல. நீ சின்னதா இருக்குறப்போ சைக்கிளா இருந்த. இப்போ ஸ்கூட்டரா ஆகிட்ட. இன்னும் வளர்ந்தா புல்லட்டாகிடுவியானு யோசிக்கிறேன்..’ ரகு சொன்னதும் வண்டி குலுங்கியது. ரகு  பதறினான்.

‘என்னடா இப்படி ஆடுற..’ அவன் பதறிப்போய் கேட்டான். இன்னும் சிறிது குலுக்கலுக்கு பிறகு வண்டி பேசியது.

‘சிரிச்சேன் டா. நீ எப்படி டா எனக்கு அண்ணனா இருக்க. கருமம். அறிவு போகுது பாரு.. ஓ.. சாருக்கு  புல்லட் கனவா? அப்பா என்னை தான் வாங்கி கொடுத்தாரா..’ வண்டி கேட்க சோகமாய் தலையை ஆட்டினான் ரகு.

’ஆனா.. அதனால தானே நீ எனக்கு கிடச்ச. சந்தோசம் தான்டா. உன்கூட விளையாட முடியல, எனக்குனு இருந்த ஒரு தம்பியும் போயிட்டானு ரொம்ப கவலையா  இருக்கும் டா. உன் நினப்பு என்னைக்கும் விட்டு போகாது டா தம்பி..’ சொல்லிவிட்டு ரகு கண்கள் கலங்கி கண்ணீரை கொப்பளித்தன.

‘டே. ராகுல்னு  சொன்னதும் முழிச்ச பயதான்டா நீ. இப்ப ஏதோ சென்டிமெண்டா நக்குற.. ரெண்டு காலுக்கு நடுவுல சக்கரத்த விட்டுடுவேன்.. ஞாபகம் வச்சிக்க’ வண்டி சொன்னதும் ரகு விழித்தான். எச்சிலை முழுங்கினான்.

அங்கிருந்து அவன் கிளம்பினான். அதன் பிறகு எல்லாம் அவனோடு தான். எங்கு சென்றாலும் அந்த வண்டியோடு தான் செல்வான். தூசி படர்ந்திருந்தால் தினமும் ஒருமுறையாவது வண்டியை தொடைத்திடுவான்.

‘பாத்தியாடி. அவனுக்கு பிடிக்காத வண்டி வாங்கி கொடுத்துட்டேன்னு சொன்னியே. எப்படி பாத்துக்குறான் பாரு.. எனக்கு தெரியும்டி என் புள்ளைய பத்தி..’ அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு போனார். அவர் முன்னால் இருந்த வண்டி குலுங்கி குலுங்கி சிரித்தது.

அன்று ரகு ரோட்டில் வண்டியில் சென்றுக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இன்னொரு வண்டி கடந்தது. அதில் வட்ட முகம், நீள முடியோடு ஒரு பெண் இருந்தாள். ரகுவின் கண்கள் விரிந்தன. வண்டியை சட்டென முறுக்கினான். வண்டியின் கண்களும் விரிந்தன.

‘டேய். என்னடா திடீர்னு முறுக்குற..’ வண்டி கேட்டது.

‘சீக்கிரம் போகணும் டா வீட்டுக்கு இல்லனா அப்பா திட்டுவாரு..’ ரகு சொன்னான்.

‘இவன் அப்பாக்கு பயப்படுற ஆள் கிடையாதே..’ வண்டி யோசித்துக்கொண்டே முன்னால் சென்றது. முன்னால் செல்லும் பெண்ணை கவனித்தது.

‘டே…’ இழுத்தது வண்டி. ‘அந்த பொண்ணா..’ வண்டி கேட்டது.

‘சீ சீ.. எந்த பொண்ணு..’ ரகு கேட்டான். சட்டென வண்டி நின்றுவிட்டது. ரகு முறுக்கி முறுக்கி பார்த்தான். வண்டி நகரவில்லை.

‘டே.. ஏன்டா இப்படி பண்ணுற’ ரகு வண்டியிடம் கெஞ்சினான்.

‘எனக்கு கால் வலிக்குது. நின்னுட்டு தான் போவேன்’

‘டே படுத்தாதடா. அந்த பொண்ணு போயிட போறாடா’

‘அப்ப பொண்ணதான் பாத்த இல்லயா’

‘ஆமா தெய்வமே. ப்ளீஸ்… போடா..’

‘எனக்கு அந்த பொண்ண பிடிக்கல போமாட்டேன்’

‘சப்பல்ஸ் பிஞ்சுரும். அவ உன் அண்ணி… உனக்கு பிடிக்க தேவையில்ல’

‘டே இப்பதான் பாத்த.. இரு இரு அப்பாகிட்டயே சொல்லுறேன்’

‘டே செல்லக்குட்டி. உனக்கு Foam வாஷ் கூட்டிட்டு போறேன்டா. ப்ளீஸ்டா.. போடா கண்ணா..’ ரகு கெஞ்சினான்.

‘ம்ம்.. ஏதோ கெஞ்சுற..’ சொல்லிவிட்டு வண்டி நகர்ந்தது. அந்த பெண்  அருகில் சென்றபோது ரகு மெதுவாக்கினான். அவளோடே வண்டியை நகர்த்திக்கொண்டிருந்தான்.

‘யாருடா இவன்..’ சொல்லிவிட்டு வண்டி ஹார்ன் செய்தது. விடாமல் ஹார்ன் செய்துக்கொண்டே இருந்தது.

‘டே தம்பி சும்மா இருடா..’ ரகு கெஞ்சினான். ஆனால் அது நின்றபாடில்லை. அந்த பெண் திரும்பி முறைத்தாள். சட்டென வண்டியின் ஹெட் லைட் ஆன் ஆகி அணைந்தது. அவள் விழிகள் இன்னும் பெரிதாகின.

‘தம்பி முறைக்கிறாடா. ப்ளீஸ் டா.. தம்பீ.. செல்லம்ல..’ ரகு கெஞ்சினான். இன்னும் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தது. அந்த பெண் வண்டியை முன்னால் சென்று நிறுத்தினாள். ரகு வண்டியை முறுக்கினாலும் வண்டி நகராமல் அவள் பக்கதிலே நின்றது. அந்த பெண் ரகுவை முறைத்தாள். ரகு  கீழே குனிந்துக்கொண்டான்.

‘ஹலோ. என் பேர் ரகு. உங்கள ரொம்ப நாளாவே தெரியும். SRM காலேஜ்ல தானே படிக்கிறீங்க. அழகா இருப்பீங்க.. யோசிக்கிறப்போ அந்த செயின எடுத்து வாயில வச்சுக்குறது ரொம்ப க்யூட். கண்ணாடிய அட்ஜஸ்ட் பண்றப்போ ஒரு விரலால ரொம்ப அழகா இருப்பீங்க. சும்மா சொல்லணும்னு தோணுச்சு..’ வண்டி ரகு சார்பாக பேசியது. ரகு குழம்பியபடி வண்டி கீழும் மேலும் பார்த்தான். வண்டி பேசிய பிறகு அவள் பக்கம் திரும்பினான்.

‘உங்களயும் தெரியும். SRMல டான்ஸ் ஆட வந்தீங்கல. நல்லா  ஆடுறீங்க..’ சொல்லிவிட்டு உதட்டோரம் ஒரு சிரிப்பு சிரித்தாள். அவளது வண்டியை ஸ்டார்ட் செய்தாள். ‘அழகாவும் இருக்கீங்க..’ கண்களை உருட்டிக்கொண்டு அவள் சொன்ன விதம் அவனுக்கு பிடித்தது. ’ஆனா பின்னாடி வர்றாதீங்க. நல்லாயில்ல..’ அவள் சொல்லிவிட்டு வண்டியை முன்னால் நகர்த்தினாள். ரகுவின் வண்டி தானாக ஹாரன் அடித்தது. அவள் நின்று திரும்பி பார்த்தாள்.

‘தம்பி. வம்பிழுக்காதடா..’ சொல்லிவிட்டு ரகு கீழே  குனிந்துக்கொண்டான்.

‘பின்னாடி வரல. நம்பர் தரலாம்ல..’ வண்டி கேட்டது. அவள் மெல்லியதாய் சிரித்தாள்.

‘உங்க ஃப்ரண்டு ஹரினிகிட்ட SRM சுவாதி நம்பர்னு கேளுங்க தருவா. வாட்ஸ் ஆப் பண்ணுங்க..’ சொல்லிவிட்டு விழிகளை விரித்துக்கொண்டு இன்னும் சிரித்தாள். வண்டியை ஸ்டார்ட் செய்து முன்னால் சென்றாள். ரகு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி ஆடினான். அவள் வண்டி கண்ணாடி வழியாக பார்த்து இன்னும் அந்த முட்டை விழிகளை உருட்டிக்கொண்டும், உதட்டின் சிரிப்புகளை தூவிக்கொண்டும் சென்றாள்.

‘டே டே.. டான்ஸர் மண்டையா. பேச தைரியம் இல்ல.. ஆடுறத பாரு. வந்து ஏறுடா..’ வண்டி கோபமாக சொன்னது.

‘டே தம்பி.. உம்மா டா. லவ் யூ டா..’ சொல்லிவிட்டு ஓடி வந்து வண்டியை கட்டிக்கொண்டான்.

அடுத்த சில நாட்களில் ரகுவும் அந்த பெண்ணும் அடிக்கடி பேசிக்கொண்டார்கள். பத்து நாட்களில் நெருக்கமாகிவிட்டார்கள். ரகு அவளிடம் எதற்காக பேசுகிறான் என்பது அவளுக்கு தெரிந்திருந்தது, அவளும் அதை விரும்பினாள் என்று தான் தோன்றியது. தினமும் அவளிடம் பேசுவதை  ரகு அவனது வண்டிக்கு சொன்னான். அவன் வண்டியில்  இருக்கும் ராகுல் அவனை கிண்டல் செய்வான்.

அடுத்த சில நாட்களில் ரகுவிற்கு ராகுலும், சுவாதியும் தான் உலகம் என்றானது. என்றும் அவர்களோடு தான். சுவாதியை அவன் வண்டியில் அழைத்து சென்றான்.

‘அண்ணி ஓகேவாடா?’ ரகு கேட்டான்.

‘டபுள் ஓகே. என்னைக்கும் அம்மா அப்பா நீ அவங்க.. நாலு பேரும் சந்தோசமா இருக்கணும் டா. அதான் எனக்கு வேணும்’

‘நீயும் தான்டா. என்னைக்கும் என்கூடவே இருக்கணும் நீ..’ ரகு  சொல்லும்பொழுதே அவன் கண்கள் கலங்கியது. முன்னால் வந்து கட்டிக்கொண்டான். வண்டியில் இருந்து ஆயில் ஒழுகியது. அது ராகுலின் கண்ணீராய் இருக்கலாம்.

அன்று ரகுவும் சுவாதியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென சுவாதி கோபமாய் எழுந்து அவளது வண்டியை எடுத்துக்கொண்டு சென்றாள். ரகு வந்து வண்டியை எடுத்தான். அவளை பின்தொடர்ந்தான்.

‘என்னடா ஆச்சு..’ வண்டி கேட்டது.

‘சும்மா சண்டை போட்டுட்டு போறாடா..’ ரகு பொறிந்தான்.

‘அண்ணிய குத்தம் சொல்லாத. நீ எதனா பிரச்சனை பண்ணியிருப்ப..’

‘சரி. உன் அண்ணிய பிடி. சமாதானம் பண்ணுவோம். என்கிட்ட நீயும் சண்ட போடாத ராசா..’ ரகு சொன்னதும் வண்டி எதுவும் பேசவில்லை. அவளது வண்டியை நோக்கி போய்க்கொண்டே இருந்தது.

சட்டென வண்டி  நின்றது. ரகு முறுக்கினான். ஆனால்  நகரவில்லை.

‘என்னடா தம்பி.. என்னடா இந்த நேரத்துல..’ ரகு கடிந்தான். அவனின் வண்டி இடது பக்கம் திரும்பியது.

’ஏன்டா.. இப்படி திரும்புற.. அவ அங்க போறாடா. தம்பி.. டே.. ராகுல்.. என்னடா..’ ரகு கேட்டான். வண்டி நின்ற இடத்துலே உறுமியது. ட்ரூர்.. ட்ரூர்.. ட்ரூர்..

‘டே.. என்ன ஆச்சு..’ ரகு கேட்டான்.

‘எனக்கு ஓரமா உட்காரணும்டா. ஸ்டாண்டு போடு..’

‘டே.. அங்க சுவாதி…’ ரகு முடிக்குமுன்னே வண்டி நிறுத்தியது. ‘அண்ணே. ப்ளீஸ் அண்ணே.. ப்ளீஸ்..’ கெஞ்சலாக கேட்டது. ராகுல் வந்ததில் இருந்து இதுதான் முதல் முறை அவனை அண்ணன் என்று அழைக்கிறது. ரகு புரிந்துக்கொண்டு இறங்கினான். ஸ்டாண்டு போட்டுவிட்டு வண்டி முன்னால் சென்று நின்றான்.

‘என்னபா.. என்ன ஆச்சு..?’ ரகு கேட்டான்.

‘அங்க பாருண்ணே..’ வண்டி இடப்பக்கம் ஒடித்தது. ரகு அந்த பக்கம் திரும்பி பார்த்தான். அங்கு ஒரு ஆள் கோட் சூட்டோடு நின்றுக்கொண்டிருந்தார்.

‘யாரு கண்ணா.. அவர் யாரு?’ ரகு கேட்டான்.

‘சண்முக பாண்டியன். அன்னைக்கு ஞாபகம் இருக்காண்ணே? நீயும் அப்போ சின்ன பையன் தானே. ஆனா எனக்கு ஞாபகம் இருக்குண்ணே. நான் வீட்டு கட்டில்ல படுத்திருந்தேன். என்னைய சுத்தி தலையணை வச்சிருந்தாங்க அம்மா. அப்போ திடீர்னு எனக்கு வியர்க்க ஆரம்பிச்சுடுச்சுண்ணே. மூச்சு திணற ஆரம்பிச்சுட்டு. கொஞ்ச நேரம் திணறிகிட்டே  இருந்துச்சு. அப்போ தான் நீ ரூமுக்குள்ள வந்த. நான் அப்படி  இருக்குறத பாத்துட்டு அம்மா அம்மானு கத்தின. அம்மா ஓடிவந்தாங்க. அப்பாவும் வந்தாரு. எல்லாரும் என தூக்கிட்டு ஒரு ஹாஸ்பிடல் போனீங்க.. எனை உடனே குழந்தைகளுக்கான ICU க்கு மாத்தினாங்க. நீங்கலாம் வெளிய பயந்துட்டே நின்னீங்க. கொஞ்ச நேரத்துல என் உடல் என்னையவிட்டு பிரிஞ்சுருச்சுனு சொன்னாங்க உங்க கிட்ட.. நீங்களாம் எனக்காக அழுதீங்கண்ணே. அத நான் பாத்துட்டு தான் இருந்தேன்’ வண்டி சொல்ல சொல்ல ரகுவிற்கு அரைகுறையாய் அந்த நினைவுகள் வர அவன் கண்கள் கலங்கியது.

‘ஆனா உனக்கு தெரியாத ஒண்ணு நான் சொல்லுறேன்ணே. அன்னைக்கு எனக்கு பெருசா எதுவும் இல்லண்ணே. நான் பொழச்சிருப்பேன்ணே. மூச்சு திணறலுக்கு தரவேண்டிய ஆக்சிஜன் அங்க இல்லண்ணே. எனக்கு திணறிகிட்டு இருந்துச்சு. அப்போ என் பக்கத்துல இருந்தவங்க ஆக்ஸிஜன் இல்ல இல்லனு ஓடிகிட்டு இருந்தாங்க. ஆக்ஸிஜன் சப்ளையருக்கு பணம் கொடுக்குறது ஊழல் பண்ணிட்டாங்கண்ணே.. அதனால அவன் சப்ளை பண்ணல. எனக்கு  ரொம்ப முடியலண்ணே. என்  கண்ணு அம்மாவ தேடுச்சு, அப்பாவ தேடுச்சு, உன்ன தேடுச்சுண்ணே. முடியலண்ணே.. திடீர்னு கண்ணு மேல போச்சுண்ணே. ரொம்ப மூச்சு இழுத்துச்சுண்ணே. ஐயோ அம்மா.. அப்பா.. என்னைய கூட்டிட்டு  போங்கனு கத்த தோணுச்சுங்கண்ணே. கொஞ்ச நேரத்துல ரொம்ப இழுத்துச்சு. ரொம்ப.. ரொம்ப.. உங்கள பிரிய கூடாத சமயத்துல நான்.. இப்போ. உன் கைய பிடிக்க நினைச்சா கூட முடியலண்ணே. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்ணே.. உன்கூட இந்நேரம் நான் நல்லா ஜாலியா இருப்பேண்ணே.. ஆனா.. தோ நிக்கிறானே. அந்த நாய். அவன் தான்ணே ஊழல் பண்ணினது. அவன் தான்.. அவன் தான்.. து து து.. இன்னும் பெரிய துரையில தான் இருக்காண்ணே. அவன்.. அதான்  எனக்கு பத்திட்டு வருது.’ வண்டி சொன்னது. ரகு கண்கள் கலங்கியது. அவனது முறைத்த கண்கள் அந்த ஊழல்வாதி மேல்  பாய்ந்தது.

‘தம்பி. அவன நான் கொல்லுறேன்டா.. நான்  கொல்லுறேன்..’ ரகு சொன்னான்.

‘சே.. தமிழ் படம் அதிகமா பாக்காதனு  சொன்னா கேட்டா தானே. லூசா டா  நீ. இங்க பாரு. அவன் இன்னும் பெரிய அதிகாரத்துல தான் இருக்கான். அவனால அதுக்கு பிறகு எத்தன உசுரு போச்சுனு  தெரியல.. நீ அவன அந்த இடத்த விட்டு இறக்குறதுக்கு மட்டும் வேலை பாரு. அது போதும் எனக்கு… அதுவே போதும்’ வண்டி சொல்லிவிட்டு ஊழல்வாதியை பார்த்தது. ரகுவும் பார்த்தான்.

பிறகு ரகு பலவிதமான இன்கம் டாக்ஸ், சிபிஐ என பல்வேறு இடங்களுக்கு தகவல் சொன்னான். ராகுலின் உதவியோடு அவனுக்கு எதிராய் ஆதாரங்களை எடுத்து மீடியாவிற்கு கொடுத்தான். அந்த சேகரிப்பின் போது மருத்துவ துறையில் அவன் செய்த பல ஊழல்களை ரகு கண்டுபிடிக்க நேர்ந்தது. மீடியா அதை  பெரிதாக ஆக்கினார்கள். அடுத்த சில நாட்களில் அந்த ஊழல்வாதி  சொத்து முடக்கப்பட்டு  தீவிர விசாரணை மேற்க்கொள்ள சொல்லி உத்தரவு வந்தது.

ரகு மிகவும் சந்தோசமாக வந்து வண்டியை கட்டிக்கொண்டான்.

‘இது முடிவில்ல டா. ஆனா.. இது முதல்படி  சக்சஸ் தான்’ வண்டி சொன்னது. ரகு சிரித்தான்.

‘ட்ரைவ் போலாமா..’ ரகு கேட்டான். அவன் மகிழ்வாக இருக்கிறான் என்று ராகுல் புரிந்துக்கொண்டான். ஹெட் லைட்டை ஆன் செய்து ஆஃப் செய்தான். ரகு ஏறி உட்கார்ந்துக்கொண்டு சந்தோசமாக பாட்டு பாடிக்கொண்டே சென்றான்.

‘அண்ணிகிட்ட பேசுனியா?’ வண்டி கேட்டது.

‘அதான் ரெண்டு நாள்ல சமாதானம் ஆகிட்டோமே. இப்ப இந்த வேலையால மீட் பண்ணாம இருந்தேன். மீட் பண்ணலாம்..’

‘ம்ம் டா..’

‘டே.. ஆனா நீ வாழ்க்கையில வந்ததும் நான் எதுக்காக இருக்கேனு அர்த்தம் புரியுதுடா தம்பி. லவ் யூ டா.. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா..’ சொல்லிவிட்டு வண்டியை ஆட்டி ஆட்டி ஓட்டினான் ரகு. வண்டி வேகமாக ஓடியது. முன்னால் ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது.

‘அண்ணா..’ வண்டி கத்தியது. அவனை தூக்கி தூர எரிந்தது. வண்டி நேராக லாரியின் அடியில் மாட்டி நசுங்கியது. தூரத்தில் விழுந்த ரகு சிறு சிராய்ப்புகளோடு எழுந்து ஓடிவந்தான். சுக்குநூறாய் கிடந்த வண்டியை நோக்கி வந்தான்.

‘டே.. ராகுல்.. தம்பீ…’ வண்டியை பிடித்துக்கொண்டு அழுதான்.

‘ஐயோ.. தம்பி. என் செல்லமே… ஐயோ.. ரெண்டாமுறையும் உன கொன்னுட்டேனே.. டே தம்பி.. ஐயோ..’

‘கோனவாயா..’ கரகர கொரகொர குரலில் வண்டி பேசியது. ‘எனக்கு எதுவும் ஆகாது. ஒழுங்கா நல்லா மெக்கானிக்கா பாத்து கூட்டிட்டு போயி எனைய சரிபண்ணுடா. நான் பேயுங்குறதையே மறந்துடுறான்..’ வண்டி சொன்னது. ரகு எச்சிலை விழுங்கி முழித்தான்.

‘போ போ.. அப்பாட்ட திட்டு வாங்க போற. என்னைய உடச்சிட்டல. பாத்துக்குறேன் டா உன்னய.. இதுல மொக்கையா பீலிங்க்ஸ் வேற..’

‘ஆனா. நீ தான்டா  என்னைய காப்பாத்தின..’ ரகு பெருமையாக சொன்னான்.

‘ஆமா.. இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. வண்டிய பாத்து ஓட்ட தெரியாத வெங்காயம்..’

‘அண்ணன வெங்காயம்னு சொல்ல கூடாதுபா..’

‘இன்னும் அசிங்கமா சொல்லுவேன். பாத்து கூட்டிட்டு போடா..’  வண்டி கரகர கொரகொர குரலில் சொல்லியது. அவன் செல்லமாக பார்த்து சிரித்தான். அவன் ஃபோனில் மெசேஜ். சுவாதி அது. ‘மிஸ் யூ..’ என்றிருந்தது. ரகு மெல்லியதாய் சிரித்துக்கொண்டான். வண்டியின் நெற்றியில் முத்தமிட்டான்.

வண்டியில் உடைந்து தொங்கி கொண்டிருந்த ஹெட் லைட் ஒரு முறை எரிந்து அணைந்தது.


-      - தம்பி கூர்மதியன்


  நன்றி: பிரதிலிபி

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி